பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

Episode 04:
ஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள்.

சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன?

ஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்… என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்மாணங்களுக்கான பின்விளைவையும் அவனே தான் அனுபவிக்க வேண்டும். இது தான் மனித வாழ்வின் அடிப்படை நியதி. இவ்வாறு தான் மனிதர்களை அல்லாஹ் இயல்பில் படைத்திருக்கிறான்.

ஆனால், இந்த இயல்புக்கு மாற்றமாக மனிதர்களைச் சிந்திக்கவும், தீர்மாணிக்கவும் தூண்டுவது தான் ஷைத்தானின் அடிப்படை இலக்கு. அதாவது, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் எடுக்கும் முடிவுகளை அவன் சுயமாக சிந்தித்துத் தீர்மாணிக்கக் கூடாது. மாறாக இப்லீஸின் பரிவாரத்தைச் சேர்ந்த சில மனிதர்களோ, அல்லது ஜின்களோ தான் அவனது விருப்பு வெறுப்புக்களை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தீர்மாணிக்க வேண்டும். ஆனால், அந்தத் தீர்மாணங்களால் ஏற்படும் தீய பின்விளைவுகளை மட்டும் அந்த மனிதன் தான் அனுபவிக்க வேண்டும். இது தான் இப்லீஸின் திட்டம்.

இந்தத் திட்டத்தைக் கச்சிதமாக நிறைவேற்றும் விதமாக இப்லீஸ் பல உத்திகளைக் கையாளுகிறான். அதாவது, ஒவ்வொரு மனிதனது மூளையும் சுயமாக சிந்திக்காமல், தான் எதிர்பார்க்கும் விதத்தில் தான் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்லீஸ், தனது பரிவாரங்கள் மூலம் திட்டமிட்டு உலகில் கையாண்டு கொண்டிருக்கும் உத்திகள் தாம் இவை.

இவ்வாறான உத்திகளைத் தான் இங்கு நாம் சுருக்கமாக “சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள்” என்று அழைக்கிறோம்.

உலக மட்டத்தில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளைப் பற்றி இனி நோக்க இருக்கிறோம். இதில் மூதல் 7 வகை பற்றியும் ஒரு சிறு அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டு, 8 வது வகை பற்றி மட்டும் சற்று விரிவாக நோக்கவிருக்கிறோம்.

1 வது உத்தி – நவீன கல்வித் திட்டம்:

எதுவெல்லாம் உண்மை / சத்தியம் சார்ந்ததாக இருக்கிறதோ, அவ்வாறான எதுவும் உண்மையில்லை என்பது போலவும், எதுவெல்லாம் அசத்தியம் / வழிகேடு / பொய் / பித்தலாட்டம் சார்ந்ததாக இருக்கிறதோ, அவை தான் உண்மையில் விஞ்ஞானம், சமூகவியல், சரித்திரம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளை உள்ளடக்கிய அறிவு என்பது போலவும் தோற்றமளிக்கும் விதமாகவே இன்றைய நவீன கல்வித் திட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த நவீன கல்வித் திட்டத்தின் குறிக்கோள் ஒன்றேயொன்று மட்டும் தான்:
பாலர் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை எந்தவொரு மனிதனும் உண்மையான அறிவைக் கற்றறிந்து விடக் கூடாது என்பது மட்டுமே.

2 வது உத்தி – விளம்பரம் / பரப்புரைகள் / எதிர்காலம் பற்றிய முன் அறிமுகம்:

செய்தி, விளம்பரம், அறிவுசார் நிகழ்ச்சிகள், நாளைய உலகின் இன்றைய நோக்கு என்பன போன்ற பெயர்களில் இன்றைய ஊடகங்கள் பரப்பி வரும் தகவல்கள் அனைத்தும் மனித கண், மற்றும் காது மூலமாகத் தொடர்ச்சியாக அவனது உள்மனதைக் குறி வைத்து நடத்தப்படும் உளவியல் தாக்குதல் தவிர வேறில்லை.

ஓரிரு தாக்குதல்கள் என்றால், உள்ளம் அதை இலகுவாக எதிர்கொண்டு சமாளித்து விடும். ஆனால், இன்று இந்தத் தாக்குதல் தொலைக்காட்சி, இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் போன்ற பல சாதனங்கள் மூலம், பல கோணங்களிலும் இருந்தும் இடைவிடாத தொடர்த் தாக்குதல்களாக நடாத்தப் படுகின்றன.

இவ்வாறான தொடர் தாக்குதலைச் சமாளிக்கும் சக்தி மனித உள்ளத்துக்குக் கிடையாது. இதன் விளைவாக நாளடைவில் மனித உள்ளம் இந்தத் தாக்குதல்களால் வீழ்ந்து விடும். வீழ்ந்த பின் அந்த உள்ளங்களைச் சிறைப் பிடித்து, ஷைத்தானின் கூண்டுக்குள் காலத்துக்கும் அடிமைகளாக அடைத்து விடுவது தான் இந்த உத்தியின் மூலம் ஷைத்தானியர்கள் அடைய முயற்சிக்கும் இலட்சியம்.

3 வது உத்தி – விளையாட்டு / அரசியல் சார்ந்த சர்வதேச மட்ட ஏற்பாடுகள்:

மேற்குறிப்பிடப்பட்ட அதே அடிப்படையில் தான் இந்த உத்தியும் கையாளப் படுகிறது. அதாவது, கண் மற்றும் காது மூலம் மனிதரது உள்மனதைக் குறி வைத்து நடத்தப்படும் இன்னொரு விதமான உளவியல் தாக்குதல் தான் இதுவும். வித்தியாசம் என்னவென்றால், மேற்குறிப்பிடப்பட்ட திட்டம், “தகவல்களை நாம் உங்களுக்குத் தருகிறோம்” என்ற தொணிப்பொருளில் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் திட்டம் “பொழுது போக்கு” என்ற போர்வையில் வடிவமைக்கப் பட்டிருக்கும். சர்வதேச உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றை இந்த உத்திக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இந்த வகையான உளவியல் தாக்குதலுக்குப் பலியாகாதோரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கையில் கிரிக்கெட் மட்டையைச் சுமந்து கொண்டு, அனுதினமும் ஏதோ ஒரு நாட்டின் விளையாட்டு அணியை ஆகர்ஷித்துக் கனவு கண்டு கொண்டு தன்னையும், தன் குடும்பத்தையும் மறந்து சுற்றிக் கொண்டிருக்கும் எத்தனையோ பைத்தியங்களை எம்மைச் சுற்றிப் பார்த்தாலே இது தெளிவாகப் புலப்படும். இவர்களைப் பொருத்த வரை யார் எக்கேடு கெட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை. உரிய நேரத்தில் உரிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியைப் கண்டு களிக்கக் கிடைத்தால் அவர்களுக்குப் போதும். இவர்களது உள்ளம் ஒரு சிறைக்குள் அடைபட்டிருப்பதை அறியாதவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். இந்தச் சிறையிலிருந்து இவர்களை வெளியில் எடுக்க அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது.

4 வது உத்தி – இமைத்தல் பொறிமுறை:

சராசரி மனிதனது கண்கள் ஒரு நிமிடத்திற்குக் குறைந்தது 10 தடவைகள் இமைக்கும். இதற்கான அவசியம், கண்கள் எப்பொழுதும் ஈரலிப்பாகவே இருக்க வேண்டும் என்பது தான். போதிய ஈரலிப்பு இல்லாத கண்களால் இரண்டு விளைவுகள் ஏற்படும்.

முதலாவது விளைவு: விழிகளின் ஆரோக்கியம் கெடுவதன் மூலம் பார்வைத் திறனில் கோளாறுகள் தோன்றும். உதாரணமாக அண்மையிலிருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் போகும் பக்கப் பார்வை நோய் இதன் மூலம் தோன்றும்.

இரண்டாவது விளைவு: மூளையின் செயல் திறன், குறிப்பாக சிந்தனையின் வீரியம் குன்றி விடும். உதாரணத்துக்கு ஒரு புத்தகத்தை நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது விழிகளின் இமைக்கும் வேகம் நிமிடத்துக்கு 4 தடவைகள் அளவுக்குக் குறைந்து விடும். இதன் விளைவாக விழிகள் சீக்கிரமே ஈரம் வற்றிப் போய் விடும். வற்றிய ஈரத்தைத் திரும்பப் பெறும் வரை இமைகளைத் தொடர்ச்சியாகக் கொஞ்ச நேரம் மூடி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, அதற்குண்டான ஏற்பாடுகளை மூளை செய்யும். இதனால் தான், தொடர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது கொட்டாவியும், தூக்கமும் வரும். இதன் பிறகு எவ்வளவு தான் அந்தப் புத்தகத்தை வாசித்தாலும், அது உள்ளத்தில் பதியப் போவதுமில்லை; அதிலிருக்கும் சரி, பிழைகளைப் பகுப்பாய்வு செய்யும் அளவுக்கு மூளை வீரியத்தோடு சிந்திக்கப் போவதுமில்லை. கொஞ்ச நேரம் தூங்கி எழும்பினால் மட்டுமே மூளையின் பூரண திறன் மறுபடி திரும்பும்.

இதே நேரம், தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக தொலைக்காட்சி, அல்லது கணனித் திரையில் இதே போல் விழிகள் லயித்துப் போயிருந்தால், தூக்கம் வராது. அதற்குப் பதிலாக மூளையின் பகுப்பாய்வு செய்யும் பகுதி மட்டும் தூங்கி விடும்; தகவல்களை சேமிக்கும் நினைவாற்றல் பகுதி மட்டும் வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னவெல்லாம் அந்தத் தொலைக்காட்சித் திரையில் காண்பிக்கப் படுகிறதோ, அவை அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்படாமல், மூளையின் நினைவாற்றல் பகுதியில் பதிவு செய்யப்படும்.

சரி, பிழை எதுவென்று தீர்மானிக்க வேண்டிய மூளையின் பகுப்பாய்வுப் பகுதி தூங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற இந்த நேரத்தில் எதுவெல்லாம் ஞாபகத்தில் பதியப்படுகின்றனவோ, அதையெல்லாம் நாளடைவில் ஆழ்மனது உண்மையென்று நம்பத் தொடங்கி விடும்.

இந்த அடிப்படையில் தான் இன்று கோடிக்கணக்கான சிறுவர்களும், வளர்ந்தவர்களும் கூட தொலைக்காட்சி, கணனித் திரை, செல்ஃபோன் திரை போன்றவற்றின் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

5 வது உத்தி – உணவு, தண்ணீர், சுவாசக்காற்று, மற்றும் மருந்து மாத்திரைகள்:

கடையில் வாங்கும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தொடக்கம், குழாய் மூலம் வீடு வந்து சேரும் தண்ணீர் வரை அனைத்திலும் இன்று திட்டமிட்டுக் கலக்கப் பட்டிருக்கும் பல்வேறு இரசாயணப் பதார்த்தங்களுக்கென்று சில உள்நோக்கங்கள் இருக்கின்றன. இவ்வாறான இரசாயணப் பதார்த்தங்களில் ஒரு பாதி எமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதை நோக்காகக் கொண்டிருக்கிறது. மறு பாதி உள்ளத்தின் சிந்தனைத் திறனை மட்டுப் படுத்தும் நோக்கில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு பொதி செய்யப்பட்டுக் கடைகளில் விற்கப்படும் தீண்பண்டங்களில் சுவையூட்டியாக சேர்க்கப்பட்டிருக்கும் “அஜினமோட்டோ” (Monosodium glutamate), மற்றும் குடி நீரை சுத்தப்படுத்துவதற்காக என்று சொல்லி, அரசாங்கமே அதில் கலக்கும் “ஃபுளோரைட்” போன்ற இரசாயணச் சேர்வைகள் புத்திக் கூர்மையை மழுங்கடிப்பதையே பிரதான குறியாகக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு மந்த புத்தி ஏற்படுவது மட்டுமல்லாமல், அனேகனானோர் இன்று ரோஷம் கெட்டவர்களாக இருப்பதற்கும் இந்தப் பதார்த்தங்கள் காரணம் என்பது நடுநிலையான பல ஆய்வுகளில் இன்று கண்டறியப்பட்டிருக்கிறது.

6 வது உத்தி – நுண்ணியந்திரங்கள் (Nanobots):

நவீன இலெக்ட்ரோனிக் தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணியந்திரங்கள் மூலம் மனித மூளையின் சிந்தனையை, ஷைத்தானியர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாரிய செயல்திட்டம் தான் இது.

இந்தத் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் பத்து வருடங்களுக்குள் இந்தச் செயல்திட்டம் பூர்த்தியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு ஷைத்தானியர்களில் ஒரு கூட்டம் இன்று மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் செயல்திட்டத்துக்குத் தலைமை தாங்குவது வேறு யாருமல்ல; கூகுல் (Google) நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகியாக இருந்து, தற்போது அதே Google நிறுவனத்தின் பங்காளர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய “ரே கர்ட்ஸ்வெயில்” (Ray Kurzweil) என்பவர் தான்.

7 வது உத்தி – இரகசிய இராணுவ பரிசோதனைகள் (குணாதிசய வடிவமைப்பு):

இது இன்னொரு வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு முறை. இன்றைய தலைமுறையோடு ஒப்பிடும் போது, இது கொஞ்சம் பழைய முறை என்று கூட சொல்லலாம்; தற்போது இந்த வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்தி வழக்கொழிந்து கொண்டு வருகிறது. இதை விட இன்னும் முன்னேற்றமடைந்த உத்திகள் மூலம் இது பிரதியீடு செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் நாசி ஜேர்மனியும், அதன் பிறகு 1950 அளவில் அமெரிக்கா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தத் துறையில் பல்வேறு ஆய்வுகள், மற்றும் பரிசோதனைகளில் ஈடுபட்டன.

பரிசோதனைகளுக்காகப் போர்க்கைதிகளையும், மற்றும் தம் இராணுவத்தில் கடமையாற்றும் அநாதை சிப்பாய்களையும் இவர்கள் பலவந்தமாக உட்படுத்தினர். இதன் மூலம், சுய சிந்தனை, சுய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட இயந்திர சிப்பாய்களை உருவாக்குவதே இவர்களது நோக்கமாக இருந்தது.

இந்த அடிப்படையில் தொடர்ச்சியாகப் பல இரகசிய செயல்திட்டங்கள் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. (CIA) மூலம் முன்னெடுக்கப்பட்டன. அவற்றுள் ஒருசிலவற்றைத் தொட்டுக் காட்டுகிறேன்:

Project Bluebird:
இந்தச் செயல்திட்டம் 1950 இல் ஆரம்பிக்கப்பட்டது.

Project MK Ultra:
இந்தச் செயல்திட்டம் 1953 இல் ஆரம்பிக்கப் பட்டது.

Project Monarch:
இது Project MK Ultra வின் ஓர் உட்பிரிவாக வடிவமைக்கப்பட்டது.

இவ்வாறான செயல்திட்டங்கள் “குணாதிசய வடிவமைப்புச் செயல்திட்டங்கள்” (Behavior Modification Programs) என்று அழைக்கப் பட்டன.

இச்செயல்திட்டங்கள் மூலம் சிப்பாய்களது குணாதிசயங்கள், ஒருசில உயர்மட்ட நிர்வாகிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப் பட்டன. Top Secret எனும் அளவுக்குப் பரம இரகசியமாகவே இவ்வாறான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், இந்த இரகசியங்கள் பற்றிய பல மறுக்க முடியாத ஆதாரங்கள் பிற்காலத்தில் வெளியுலகுக்குக்க் கசியத் தொடங்கி விட்டன.

இவ்வாறு குணாதிசய வடிவமைப்புச் செயல்திட்டங்களுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் “உறங்கும் கொலையாளிகள்” (Sleeper Assassins) என்றும், Manchurian Candidates என்றும் அழைக்கப்பட்டார்கள். இந்த வகையான குணாதிசய வடிவமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதைப் பற்றிய சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் கைதிகளும், சிப்பாய்களும் இரகசிய இராணுவ முகாம்களுக்குக் கொண்டுவரப் படுவார்கள். அங்கு முதல் கட்டமாக இவர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். தான் யார் என்பதை அவர்கள் மறந்து போகும் அளவுக்கு சித்திரவதைகள் உக்கிர நிலையை அடையும். தான் யார் என்பதை மறக்கும் இந்த அநாதரவான கட்டத்தை ஒரு மனிதன் அடையும் போது, அவனது ஆளுமை (Personality) இரண்டாகப் பிளக்கும்.

இந்த நிலையில் அவனது சுய மனோபாவம் / ஆளுமை / பாத்திரம் என்பது மயக்க நிலையை அடைந்து விடும். சுய ஆளுமை மயக்க நிலையை அடைந்ததும், அந்த இடத்தை நிரப்பும் நோக்கில் அவனது ஆழ்மனதில் இன்னொரு புது ஆளுமை / புதுப் பாத்திரம் உருவாகும். இப்படியொரு புதுப் பாத்திரம் தனக்குள் உருவானதை அந்த சிப்பாய் உணர்ந்திருக்கவே மாட்டான். மேலும் இந்தப் புதிய பாத்திரத்தின் மனோபாவம் எந்த அனுபவ அறிவும் இல்லாத ஒரு குழந்தையின் மனதைப் போன்று தான் இருக்கும்.

இவ்வாறு சித்திரவதை மூலம் உருவாக்கப்படும் புதிய பாத்திரத்தை “அறிதுயில்” (Hypnotism) நிலை மூலம் இவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் பயிற்றுவிப்பார்கள். புதிய பாத்திரத்தின் குணாதிசயங்களை அணு அணுவாக வடிவமைப்பார்கள். வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின், அந்தப் பாத்திரத்தைத் தேவைப்படும் சமயத்தில் விழிக்க வைப்பதற்காகவென்று ஒரு சங்கேத வார்த்தையையும் (Password) சேர்த்து அவனது ஆழ்மனதில் பதிய வைத்து விடுவார்கள்.

அதன் பிறகு புதுப் பாத்திரத்தை உறங்க வைத்து விடுவார்கள். புதிய பாத்திரம் உறங்கிய அடுத்த கணம் மீண்டும் அவனது பழைய சுய பாத்திரம் விழித்துக் கொள்ளும். ஆனால், தனக்குள் இன்னொரு பாத்திரம் உறங்கிக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியவே தெரியாது.

என்ன நடந்ததென்று எந்த விவரமும் அறிவிக்கப்படாமல், அந்த சிப்பாய் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டு, அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப் பட்டவனாக மீண்டும் சமுதாயத்தில் ஒருவனாக வாழ அனுமதிக்கப்படுவான்.

விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் அந்தச் சிப்பாய் / போர்க் கைதி மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியோடு மீண்டு விடுவான். தனக்கு நேர்ந்த பரிசோதனை பற்றி எதுவுமே அறியாதவனாக அவன் வாழ்ந்து கொண்டிருப்பான்.

காலப்போக்கில் அவனை வைத்து அரசியல் கொலைகள் செய்வது போன்ற ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தைச் சாதிக்க வேண்டிய சமயம் வரும் போது நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ அவன் தொடர்பு கொள்ளப்படுவான். தொடர்பின் போது ஏற்கணவே அவனது ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சங்கேத வார்த்தை அவன் காதுகளுக்குக் கேட்கும் விதமாக சொல்லப் படும்.

சங்கேத வார்த்தை அவன் காதுகள் வழியாக மூளையை அடைந்த மறு கணமே அவனது இயல்பான ஆளுமை / பாத்திரம் உறங்கி விடும்; வடிவமைக்கப்பட்ட புதுப் பாத்திரம் விழித்துக் கொள்ளும். அதன் பிறகு அவனுக்குரிய கொலை செய்யும் பணி ஒப்படைக்கப்படும். கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அணுவும் பிசகாமல் ஓர் இயந்திரத்தைப் போல் அவன் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடிப்பான்.

காரியத்தை முடித்த பின் மீண்டும் அவனது இயல்பான பழைய ஆளுமைக்கு அவனை மாற்றி, மீண்டும் அவனை சமூகத்தில் கலந்து வாழ விட்டு விடுவார்கள்.

இதில் பரிதாபம் என்னவென்றால், தான் செய்த கொலைகள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஓர் அப்பாவியாகவே அவன் சமூகத்தில் வலம் வந்து கொண்டிருப்பான்.

காலப்போக்கில் தடயங்களை வைத்து சட்டம் அவனைக் கைது செய்தாலும், அவன் செய்த கொலைகள் பற்றியோ, அவனைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் பற்றியோ எந்த வாக்கு மூலமும் கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அவன் குற்றம் சுமத்தப்பட்டு சிறை செல்வான்.

இந்த அடிப்படையில் இவர்கள் பலரையும் வடிவமைத்து சமுதாயத்தில் உலவ விட்டது நாளடைவில் பிரச்சினையைத் தோற்றுவிக்கத் தொடங்கியது. இவ்வாறானவர்களைக் கைது செய்து விசாரிக்கும் போதெல்லாம், இவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை சட்டம் கண்டு கொள்ளத் தொடங்கியது. இந்தப் புது விசித்திர நோயின் பின்னணி என்னவென்பது பற்றிப் பலரும் ஆய்வு செய்யத் தொடங்கி விட்டார்கள்.

நிலைமை இவ்வாறு தொடர்ந்தால், தமது இரகசியத் திட்டங்களெல்லாம் அம்பலமாகி விடும் என்று அஞ்சிய இந்த இரகசிய ஆட்சிக் கும்பல், உடனே ஒரு புதுத் திட்டம் தீட்டியது.

இரண்டு ஆளுமைகளை ஒருவர் தனக்குள் ஒருங்கே கொண்டிருந்தால், அதை “Split Personality Disorder” என்றும், இரண்டுக்கு மேற்பட்ட ஆளுமைகளை ஒருவர் தனக்குள் கொண்டிருந்தால், அதை “Multiple Personality Disorder” என்றும் புது மன நோய்களாக இவர்களே பெயர் சூட்டி, அவற்றை மருத்துவ உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அத்தோடு மட்டும் இவர்கள் நின்று விடவில்லை; செயற்கையாக இவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மனநோய்களை இயற்கையான மனித நோய்கள் என்று உலகமே அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல பரப்புரைகளையும் (Propaganda) தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மீடியாக்கள் மூலம் உலக அரங்கில் பரப்பினார்கள்.

இதன் விளைவாக மருத்துவ அகராதியில் இந்த நோய்களும் உள்ளடக்கப் பட்டன. இவை இயற்கையான மனநோய்கள் என்ற அடிப்படையில் இவற்றுக்கு உலக அங்கீகாரமும் கிடைத்தது. உதாரணத்துக்கு Multiple Personality Disorder எனும் நோயைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ஹாலிவூட் மூலம் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கடந்த காலங்களில் வெளியிடப் பட்டதையும், அவ்வாறான ஆங்கிலத் திரைப்படங்களைக் காப்பியடித்துத் தமிழில் கூட “அந்நியன்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானதையும் கூட குறிப்பிடலாம்.

தமது வண்டவாளங்களை மறைப்பதற்காக, இல்லாத ஒரு புது நோயையே மருத்துவ அகராதியில் நுழைத்து, அதையொரு பிரசித்தி பெற்ற கலாச்சாரமாகவும் மாற்றியவர்கள் தாம் இந்த ஷைத்தானியர்கள். உலக அரங்கில் இவர்களுக்கு இருக்கும் ஆதிக்கம் எத்தகையது என்பதை ஊகித்துக் கொள்வதற்கு இந்த ஓர் உதாரணமே சிந்திப்போருக்குப் போதுமானதாக இருக்குமென்று கருதுகிறேன்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s