தொண்டி வரலாறு

தொண்டி – ஒரு வரலாற்றுப் பார்வை.

My Thondi.Com™

===================

தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான ஓர் ஊர் தொண்டி.

இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு கோடியில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி. இஸ்லாமியர்களோடு மற்ற இரண்டு சமுதாய மக்களும் இணைந்து வாழும் ஊர்.

பல்வேறு அரசியல் சார்ந்த, அரசியல் சாரா தலைவர்களின் ஆரம்பம் தொண்டியாக உள்ளது.

மக்கள் நிலை:

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,465 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.

இவர்களில் 9316 (49%) ஆண்கள், 9149 (51%) பெண்கள் ஆவர்.

ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் தொண்டி(1000:982) என்ற அளவில் உள்ளது.

கல்வியறிவு அடிப்படையில் பார்க்கையில்,
தொண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 78.7% ஆகும்.

ஆண்களில் 81.9% ம், பெண்களில் 75.3%ம் கல்வியறிவு பெற்றுள்ளனர். இது இந்திய தேசிய பெண்களின் சராசரி கல்வியறிவான 64.6% விட மிக அதிகம்.

அதே போன்று தொண்டி மக்கள் தொகையில் 13.4% பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

வரலாற்றில் தொண்டி.

தொண்டி முற்காலங்களில் பிரசித்திப் பெற்ற துறைமுக நகரமாக விளங்கியதாக வரலாற்றில் நாம் ஆதாரம் காண முடிகிறது.

பாண்டிய மன்னன் இறந்த பிறகு அரியணைக்காக அவரது மகன்கள் குலசேகர பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் போர் புரிந்தனர். அதில் பராக்கிரம பாண்டியன் கொல்லபட்டான். இதை கேள்விபட்ட இலங்கை மன்னன் பராக்கிரம பாபு என்பவன் தன் பெயர் கொண்டவனை கொன்ற பாண்டியனை கொல்வதற்கு படை எடுத்து வந்தான்.

பாண்டிய நாட்டின் பல இடங்களை பிடித்து விட்டான். சுந்தரபாண்டிய மன்னன் சிறப்பாக போர் புரிந்தான். ஆனால் போரில் அவனும் கொல்லப்பட்டான் . அவன் இறந்த இடம் இன்று தொண்டிக்கு அருகில் ‘சுந்தர பாண்டியன் பட்டினம்’ என்று அழைக்கப்படுகிறது.

இறுதியில் பாண்டியன் சோழர்களின் உதவியை நாடுகிறான். சோழன் தன் படை ஒன்றை தொண்டிக்கு அனுப்பி பராக்கிரம பாபுவை வென்று பாண்டியனுக்கு நாட்டை மீட்டுதருகிறான்.

பாண்டிய மன்னன் சோழ மன்னனிடம் ‘இலங்கை அரசன் மீண்டும் தம் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும்’ என்றான்.

சோழ மன்னனும் தன் படையை காவலுக்கு வைத்து நாடு திரும்பினான்.
அந்த படையினர் தான் தொண்டியில் இன்றும் உள்ளனர் எனவும், அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கபடுகிறார்கள் எனவும் வரலாறுகளில் குறிப்புகள் உள்ளன.

தொண்டி பற்றிய சங்ககாலச் செய்திகள்.

அம்மூவனார் என்னும் புலவர் இந்த ஊரின் அழகைத் அகநானூற்றுத் தலைவி ஒருத்தியின் அழகோடு ஒப்பிடுகிறார்.
இந்த ஊரிலுள்ள மீனவர் கீழைக்காற்று அடிக்கும்போது தம் பழைய திமில் படகுகளைப் புதுப்பித்துக்கொள்வார்களாம். கடலில் பிடித்துக்கொண்டுவந்த மீன்களை மணல் மேட்டில் கொட்டி ஊருக்குப் பகிர்ந்து கொடுப்பார்களாம்.
(அகநானூறு 10 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டி (பாண்டிநாட்டுத் துறைமுகம்)
அரபிக்கடல் ஓரத்தில்
சேரநாட்டில் தொண்டி என்னும் துறைமுகம் இருந்தது போலவே பாண்டிய நாட்டிலும் தொண்டி என்னும் ஊர் இருந்தது. இதனை
இக்காலத்தில் உள்ள தொண்டி எனலாம்.
தொண்டித் துறைமுகம் வங்கக்கடல் ஓரமாக இருந்தது. அங்கிருந்து அகில், துகில் என்னும் பட்டாடை, சந்தனம், கருப்பூரம் ஆகிய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றின் நறுமணம் மதுரைக் கூடல் நகரில் வீசியது. கொண்டல் என்னும் கீழைக்காற்று வீச்சில் அந்த மணம் கலந்து வந்தது. [1]

‘ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,
தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல்

(சிலப்பதிகாரம் 14 ஊர்காண் காதை)

===========================

My Thondi.Com™ Team.