தொண்டி, ஜூலை 16:
தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் இன்று (16.07.2026) காலை 10.00 மணியளவில் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த பத்து நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டபோதும், குழாய் மூலம் சீரான குடிநீர் வழங்குவதற்கு பதிலாக “டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்கப்படும்; அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற பதிலே கிடைத்ததாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், 5-வது வார்டு மட்டுமின்றி தொண்டியின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் குழாய்களில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், குடிநீர் விநியோகம் குறிப்பிட்ட கால அட்டவணையின்றி, எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “எப்போது தண்ணீர் வரும் என்று தெரியாமல் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லவும், அன்றாட குடும்பப் பணிகளை மேற்கொள்ளவும் பெரும் சிரமமாக உள்ளது” என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், இன்று மாலை 5.00 மணிக்குள் 5-வது வார்டு பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாலை 6.00 மணிக்கு மீண்டும் பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தை தொடருவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
தொண்டி நகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, குடிநீர் விநியோகத்திற்கான நிரந்தர கால அட்டவணையை அறிவித்து, சீரான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
– MYTHONDI.COM | தொண்டியின் புதிய அடையாளம்