தொண்டியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS ஆய்வு

தொண்டி, ஜூலை 15:

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன், I.A.S., இன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை திருவாடானையில் தொடங்கி வைத்து, அதன் பின்னர் தொண்டி நகருக்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அரசு அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

பேருந்து நிலையத்தில் ஆய்வு

தொண்டி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஒழுங்கு, தூய்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

அரசு பள்ளிகளில் ஆய்வு

தொண்டி அரசு பள்ளிகளுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் கற்றல் சூழல், வகுப்பறை வசதிகள், ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாடு, ஆசிரியர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

அங்கன்வாடி மையத்தில் பார்வை

பெரிய பள்ளிவாசல் அருகே இருந்த பழைய அங்கன்வாடி மையம் சேதமடைந்து பயன்பாட்டிற்கு இருப்பதை ஆய்வு செய்து அதனை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



பொதுமக்களிடம் நேரடி குறைகள் கேட்பு

கள ஆய்வின் போது பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

தொண்டியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அவற்றை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




இந்த ஆய்வின் மூலம் அரசு திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைவதையும், பொதுமக்களின் தேவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதையும் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

– MYTHONDI.COM | தொண்டியின் புதிய அடையாளம்

Leave a comment