தொண்டி, ஜூலை 16:
இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (16.07.2026) காலை 11.00 மணியளவில் தொண்டியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.
தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியின் போது, டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்க விடாமல் அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை மூடி வைத்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
டெங்கு பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
– MYTHONDI.COM | தொண்டியின் புதிய அடையாளம்