தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விழா: பொறியாளர் எம்.எம். அபூபக்கருக்கு விருது வழங்கி கௌரவம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டி மாநகரில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (18.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்நிகழ்வில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து இந்து கிராமத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8 ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், ஐக்கிய ஜமாஅத் மற்றும் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

சமூக ஒற்றுமைச் செம்மல் விருது:
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் முக்கிய அங்கமாக, முன்னாள் ஐக்கிய ஜமாஅத் தலைவரும், தற்போதைய கௌரவத் தலைவருமான மரியாதைக்குரிய பொறியாளர் திரு. எம்.எம். அபூபக்கர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய மற்றும் இஸ்லாமிய அல்லாத சமூகங்களுக்கிடையே ஆழமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் பெருமுயற்சி மேற்கொண்டார். அந்த நன்முயற்சிகளின் விளைவாகவே நிகழ்காலத்தில் இதுபோன்ற ஒற்றுமை நிகழ்வுகள் சாத்தியமாகியுள்ளன என்பதை நினைவு கூரும் விதமாக, அவருக்கு இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் “சமூக ஒற்றுமைச் செம்மல்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவ்விருதினை சபையின் தலைவர் திரு. எல்.ஆர்.சி. இராஜசேகர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

செய்தி வெளியீடு: தலைவர் மற்றும் நிர்வாகிகள்,
இந்துமத தர்ம பரிபாலன சபை, தொண்டி.

Leave a comment