இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்

இராமநாதபுரம் | செப் 26 – 2019

இராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தில் சங்க கால நாகரீகத்தின் 13000 எச்சங்கள் காணப்படுகின்றன.

13-000

கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது.

வைகை நதி கடலில் கலக்கும் இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

இங்கு கிடைத்த பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆபரணப் பொருட்கள், சங்கு வளையல்கள், மண்பாண்டங்கள், ரோமானிய மண்பாண்டங்கள் உள்ளிட்ட அரிய வகை பொருட்கள் அரசு அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கியது. அதையடுத்து 8-வது முறையாக அழகன்குளத்தில் அகழாய்வுப் பணி மே 9-ம் தேதி தொடங்கியது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 52 குழிகளுக்கும் மேல் தோண்டி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுப் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

இதுகுறித்து அகழாய்வுப் பணி இயக்குநர் ஜெ.பாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வணிக நகரமாக விளங்கிய அழகன்குளத்தில் விரிவான அகழாய்வுப் பணி நடத்தப்பட்டது. இந்தியாவில் மனிதன் முதன் முதலாகப் பயன்படுத்திய 6 வெள்ளி முத்திரை நாணயங்கள், சதுர வடிவில் செப்புக் காசுகள் என 50 நாணயங்கள் கிடைத்துள்ளன.

யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடுமண் பாண்டங்கள், விலை உயர்ந்த கல் மணிகள், சங்கு வளையல்கள், ஆபரணங்கள், பச்சைநிற கற்கள், கண்ணாடியால் ஆன மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன.

விதை கலன் கண்டுபிடிப்பு

இங்கு நடத்தப்பட்ட ஆய்வின் போது ஒரு குழியில் 5 அடி ஆழத்தில் செங்கல் கற்களால் கட்டப்பட்ட சிறிய தானிய விதை கொள்கலன் காணப்பட்டது. இதில் 150 கிராம் எடையுள்ள விதையும் கிடைத்துள்ளது. இது என்ன விதை எனத் தெரியவில்லை.

மேலும் கோட்டை மேடு பகுதியில் நடந்த அகழாய்வில், சுடு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை, இரும்பினால் ஆன பொருட்கள், ரோம், கிரேக்கம், சீனா ஆகிய வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் அரிய மண்பாண்டங்கள், ரவ்லட்டட் எனப்படும் ரோமானிய மண்பாண்டங்கள், அரிடைன் மண்பாண்டங்கள், எண்ணெய், மதுவை பாதுகாப்பாக வைக்க ஆம்போரா எனப்படும் குடுவைகள், இந்திய கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

சிலுவை முத்திரை!

தமிழகத்தில் இதுவரை கிடைக்காத சிலுவை பொறித்த முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இது ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு இருந்ததற்கான அடையாளமாக உள்ளது. இங்கு இரும்பு பொருட்கள் தயாரிக்கும் கொல்லம்பட்டறை, சங்கு ஆபரணம் செய்யும் தொழிற்கூடம் காணப்பட்டுள்ளது. அங்கு தாழிகள் (பெரிய மண்பானை), மண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தோண்டிய இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான சங்குகளும், சங்கு ஆபரணங்களும் கிடைத்துள்ளன.

சங்க காலத்தின் அடையாளம்

இவை அனைத்தும் சங்க காலத்தை (கி.மு.300 முதல் கி.பி.300-க்கு இடைப்பட்ட காலம்) சேர்ந்தவையாகும்.

தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 13,000 பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன.

கீழடியில் 1,300 பழங்காலப் பொருட்களே கிடைத்துள்ளன. உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி இங்கு கிடைத்த அரிய பொருட்கள் இக்கிராமத்திலேயே பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.

நன்றி : தி இந்து தமிழ்


தொகுப்பு

My Thondi.Com Team

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s