பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 1

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
============================

Episode 01 – அறிமுகம்:

முழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது. மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும், மற்றும் அமானுஷ்யமான பல நிகழ்வுகளதும் பின்னணிகளை அலசும் ஒரு தொடராகவே இன் ஷா அல்லாஹ் இது இருக்கும்.

இந்த நெடுந்தொடரில் இரண்டு வகையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்:

முதலாவது வகையான தகவல்கள்:
குர்ஆன், மற்றும் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் முஃமின்கள் நம்ப வேண்டிய பல மறைவான அம்சங்கள் பற்றி இங்கு அலசப்படும். இதில் அனேகமானவை ஈமானோடு தொடர்பு பட்டவை. இவற்றை எந்த அடிப்படையில் நம்ப வேண்டுமோ, அந்த அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். அதற்கு மாற்றமான வேறு அடிப்படைகளில் இவற்றை நம்பினால், இறைச்செய்திகளை நிராகரித்த குற்றத்தைச் செய்தவர்களாக வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படலாம். எனவே, இந்த வகையான செய்திகள், முறையான மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான விளக்கங்களோடு அலசப்படும்.

இவ்வாறான கருத்துக்கள் விடயத்தில் எவருக்காவது என்னோடு மாற்றுக்கருத்து ஏற்பட்டால், இந்தத் தொடர் நிறைவடைந்த பின் இன் ஷா அல்லாஹ் தாராளமாக அது குறித்து எதிர்வாதம் வைக்கலாம்; அல்லது என்னோடு விவாதிக்க முன்வரலாம். இன் ஷா அல்லாஹ் அனைத்தையும் வஹியின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமின்றி என்னால் நிரூபிக்கலாம் என்ற உறுதியான நம்பிக்கையோடு தான் இதை எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்.

பகுத்தறிவு, யதார்த்தவாதம் போன்ற சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே தமது வாழ்வில் அனைத்தையும் சிந்தித்துப் பழகிவிட்ட இன்றைய தலைமுறையில், அனேகமான முஸ்லிம்கள் கூட மறைவான உலகம் பற்றிய மார்க்கத்தின் நிலைபாடுகளை இன்று தலைகீழாகவே புரிந்து வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

பல மார்க்க ஆதாரங்களை, அவை கூறும் உண்மையான கருப்பொருளில் புரிந்து கொள்ளாத நிலையில் இவ்வாறானவர்கள் ஆதாரங்களை அனுகுவதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறான தப்பான அனுகுமுறைகளைத் தகர்த்தெறிய வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. இந்தக் கடமையுணர்வின் அடிப்படையிலும் பல அமானுஷ்யமான அம்சங்களை இந்தப் பகுதியில் அலசவிருக்கிறோம். இன் ஷா அல்லாஹ் தக்க ஆதாரங்களோடு ஒவ்வொன்றும் தெளிவாக நிரூபிக்கப்படும்.

இரண்டாவது வகையான தகவல்கள்:
இந்த வகையைச் சார்ந்த தகவல்கள், மேற்கூறப்பட்ட முதலாவது வகையிலிருந்து சற்று மாறுபட்டது. அறிவியல், மற்றும் நிதர்சனம் சார்ந்த பகுதி தான் இது. இந்த வகையான தகவல்களில் மார்க்க நிலைபாடுகளுக்கு எந்தவகையிலும் முரணாகாத விதத்தில், விஞ்ஞானம் சார்ந்த சில அம்சங்கள் அலசப்படும். மேலும், மைய நீரோட்ட வரலாற்றுப் பதிவுகளில் சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகள், மற்றும் தற்கால உலகில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல அமானுஷ்ய நிகழ்வுகள் போன்றவை பற்றியும் தேவைக்கேற்ப இங்கு அலசப்படும்.

இவ்வாறான அறிவுசார் பகுதிகளில் எனது கருத்துக்கள் தான் நூற்றுக்கு நூறு வீதம் சரியென்று நான் முழு உத்தரவாதத்தோடு வாதிட மாட்டேன். எனது தேடல்களுக்கும், ஆய்வுகளுக்கும் அமைய இந்தக் கருத்துக்கள் தாம் உண்மை என்பது தான் இங்கு எனது நிலைபாடு.

நான் சொல்கிறேன் என்பதற்காக இவ்வாறான தகவல்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எனது நோக்கமல்ல. வாசகர்களாகிய நீங்கள் இவற்றை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் இது குறித்து மேலதிகத் தேடல்களை நீங்களும் மேற்கொள்ள வேண்டும். அந்தத் தேடல்களின் மூலமும் எனது கருத்துக்களை சரியென்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே, நீங்கள் இவ்வாறான தகவல்களை ஏற்றுக் கொள்வது சிறந்தது. இதையே நான் வலியுறுத்துகிறேன்.

சுருக்கமாகக் கூறுவதென்றால், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான தகவல்களும் இரண்டறக் கலந்த நிலையில் தான் இந்த நெடுந்தொடர் அமைந்திருக்கும். மார்க்க நிலைபாடுகள் சார்ந்த அம்சங்கள் எவை? உலகளாவிய அம்சங்கள் எவை? என்பதை வாசகர்கள் இலகுவாகப் பிரித்தறிந்து கொள்ளும் வண்ணமே இந்தத் தொடர் வடிவமைக்கப் பட்டிருக்கும் இன் ஷா அல்லாஹ்.

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது, “மார்க்க நிலைபாடுகள், மற்றும் மார்க்கம் அல்லாத உலகளாவிய தகவல்கள் ஆகிய இரண்டு வகையான தகவல்களையும் ஒன்றாகக் கலந்து தான் இந்தத் தொடர் அமைய வேண்டுமா? இரண்டு வகையான தகவல்களையும் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு ஆய்வுகளாக வெளியிட்டால் பல குழப்பங்களைத் தவிர்க்கலாமே..?” என்ற கேள்வி தான் அது. இந்தக் கேள்விக்கான சுருக்கமான எனது பதில் இது தான்:

இங்கு நாம் அலசவிருக்கும் விடயத்தைப் பொருத்தவரை, மார்க்க ஆதாரங்களையும், அது சார்ந்த உலகளாவிய தகவல்களையும் தனித்தனியாக அலசுவதை விட, ஒன்றாக சேர்த்து அலசுவது தான் பொருத்தமான அனுகுமுறை. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து அனுகும் போது, பல மர்மங்கள் பற்றிய உண்மைகளைத் தெளிவான வடிவத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இதன் விளைவாகவே இந்த அனுகுமுறை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. எனது அனுகுமுறையில் இருக்கும் நியாயங்களை, இந்தத் தொடர் நிறைவடையும் போது வாசகர்களாகிய நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தத் தொடர் மூலம் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் உங்களை வந்தடையக் காத்திருக்கின்றன. இதுவரை நீங்கள் கற்றறிந்திருக்கும் அறிவின் பிரகாரம், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வது போலவும் பல தகவல்கள் இங்கு சொல்லப்படும். இதன் மூலம் உங்கள் சிந்தனையைக் குழப்புவது எனது நோக்கமல்ல. மாறாக, நிஜம் என்று இதுவரை நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் பல அம்சங்கள் உண்மையில் நிஜங்கள் அல்ல; அவை போலிகள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதே இந்த ஆய்வின் நோக்கம்.

எந்தவொரு விடயத்தைப் பற்றியும் சரியான உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அதைப் பல மாறுபட்ட கோணங்களிலிருந்து நோக்க வேண்டும். அப்போது தான், அதன் சரியான வடிவத்தைக் கிரகித்துக் கொள்ள முடியும். இதுவரை இந்த உலகத்தையும், இதிலிருக்கும் படைப்புகள், ஜீவராசிகள் போன்றவற்றையும் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் மட்டுமே நம்மில் அனேகமானோர் பார்த்துப் பழகி விட்டார்கள்.

ஆனால், இதே உலகத்தை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, இதுவரை பார்வைக்குப் புலப்படாத பல உண்மைகள் பளிச்சென்று புலப்படும். வழமையான கோணத்திலிருந்து பார்த்த போது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட மர்மங்கள் போல தோற்றமளித்த பல அம்சங்கள், உண்மையில் மர்மங்கள் அல்ல என்பதும் இந்த மாறுபட்ட கோணத்தின் மூலம் புலப்படும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் தான் இந்தத் தொடர் அமைந்திருக்கும்.

இந்த நீண்ட ஆய்வுக் கட்டுரை இன் ஷா அல்லாஹ் நான்கு பிரதான தொடர்களாக வகைப்படுத்தப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக ஓர் ஒழுங்கில் பதிவேற்றப்படவிருக்கின்றது. ஆய்வின் கருப்பொருளை வாசகர் இலகுவில் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலேயே இவ்வாறு நான்கு தொடர்களாக இந்த ஆய்வு வகுக்கப் படுகிறது. நான்கு தொடர்களதும் சாராம்சம் பின்வருமாறு:

முதலாவது தொடர்:

ஜின்களின் உலகம் பற்றி விளக்கும் பல மார்க்க ஆதாரங்களை நமது புரிதலுக்கு ஏற்ப இலகுவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ்வின் படைப்புகள் பற்றிய விஞ்ஞான ரீதியான பல அடிப்படைகளை அலசுவதாகவே இந்த முதலாவது தொடர் அமைந்திருக்கும். இதில் கணிசமான அளவு விஞ்ஞானம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப் பட்டிருக்கும். எனவே, விஞ்ஞானத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லாத சில சகோதரர்களுக்கு இந்தத் தொடரை வாசிக்கும் போது சில சமயம் கொட்டாவி வரலாம்; சில பகுதிகள் கொஞ்சம் புரிந்து கொள்ளக் கடினமானவை போலவும் இருக்கலாம். இருந்தாலும் சகித்துக் கொள்ளுங்கள்; வேறு வழியில்லை. ஏனெனில், இந்த ஆய்வின் பிற்பகுதியில் அலசப்பட இருக்கும் ஜின்கள் பற்றிய பல மர்மங்களைப் புரிந்து கொள்வதற்கு இந்த அறிவியல் பற்றிய அறிமுகம் அத்தியாவசியமானது.

இரண்டாவது தொடர்:

மார்க்க நிலைபாடுகள் குறித்த எந்தக் கருத்துக்களும் இந்தத் தொடரில் இருக்காது. மாறாக, அதிர்ச்சி தரக் கூடிய, நம்ப முடியாத, மறைக்கப்பட்ட பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி இந்தத் தொடரில் ஓரளவுக்கு அலசப்படும். இந்தத் தொடரில் பல சுவாரசியமான உண்மைச் சம்பவங்கள் பற்றிக் கூறப்படும். மேலும், மாற்றுக் கருத்தில் இருக்கக் கூடிய பலருக்கும் இந்தத் தொடரில் தான், எனக்கு எதிரான அனேகமான மாற்றுக் கருத்துக்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அவசியம் என்று கருதுவதாலேயே இந்தத் தொடரும் எமது ஆய்வில் உள்ளடக்கப் படுகிறது.

மூன்றாவது தொடர்:

இது தான் முக்கியமான தொடர். மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் ஜின்களின் உலகம் பற்றி விரிவாக அலசும் ஒரு தொடராக இந்தத் தொடர் தான் இருக்கும். இந்த மூன்றாவது தொடர் மக்களுக்குத் தெளிவாகப் புரிய வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு மட்டுமே மேற்குறிப்பிடப்பட்ட முதலாம், இரண்டாம் தொடர்கள் கூட உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. மேலும், இந்தத் தொடர்களின் இறுதியில், மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் ஜின்களின் உலகம் குறித்து யார் என்னோடு விவாதிப்பதாக இருந்தாலும், இந்தத் தொடரையொட்டியே விவாதிக்க வேண்டியிருக்கும்.

நான்காவது தொடர்:
மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும், மற்றும் நவீன அறிவியலின் அடிப்படையிலும் நாம் வாழும் இந்தப் பூமியைப் பற்றி ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசுவதாகவே பிரதானமாக இந்தத் தொடர் அமைந்திருக்கும். இந்தத் தொடருக்கான அவசியம் என்னவென்பதுவும் இன் ஷா அல்லாஹ் தொடரின் இறுதியில் வாசகருக்கே புரியும்.

அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்; இனி நமது பயணத்தை ஆரம்பிக்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s