“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9

தேதி : 21-09-2017

…….………………………………

​9 – விடுதலை உணர்வை ஊட்டியவர்கள்.

தெற்கின் முதல் போராளி

தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டபொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த  கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய  கட்டபொம்மன் கதைப்பாடல். 

அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,

மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்

மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்

தர்ம குணவான் இபுராமு சாகிபும்

தம்பி இசுமாலு ராவுத்தனும்…

என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.

கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய MOOKAH என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக்  கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

முதல் சுதந்திரப் பிரகடனம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943  இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில்  ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government)  என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (Azad Hind Fauj)  என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார். அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943 இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.

மண்ணிற்காக மார்க்க அறிஞர்கள்

தென்னகத்தில் இயங்கி வந்த அரபிக் கல்லூரிகளும் மதரசாக்களும் அன்று தேச விடுதலைப் போராட்டக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இந்நிறுவனங்களில் பணியாற்றிய உலமாக்கள் ஆங்கில அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

1831 மே 6 இல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.

தேச விடுதலைப் போராட்டம் மார்க்க அமல் (வழிபாடு) தொடர்பானது  என்ற தேசாபிமான முழக்கங்களுடன் ஆங்கிலேயருக்கு எதிராக எழுதியும் பேசியும் தங்கள் சுதந்திரப் பங்களிப்பைத் தந்த தேவ்பந்த் உலமாக்களின்  பங்கு மகத்தானது. 

ஆங்கிலேயர் மீதுள்ள வெறுப்பினை அவர்களது மொழியின் மீதும் காட்டினர். ஆங்கிலம்  படிப்பது ஹராம்  என்று தேவ்பந்த் உலமாக்கள் பத்வா (மார்க்கத்தீர்ப்பு) கொடுத்தனர்.

அந்நியப் பொருட்களைப் பரிஷ்கரிக்க வேண்டும் சுதேசிப் பொருட்களையே வழங்கவேண்டும் என்ற காந்திஜியின் சுதேசி இயக்கம் நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கலாச்சார இயக்கமாக உருவாகியது. இதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். 

மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி  அவர்கள், கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்தார். அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

1920 இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலானா முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி  மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற  பேசுகின்ற  செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றிய உலமாக்களின் சுதந்திர பங்கேற்பு மகத்தானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s