“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 8

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 8

தேதி : 21-09-2017

…..…….……………………………

​8 – முதல் விடுதலைப் போர்

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால்.

நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிர்ந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட  சிராஜ்-உத்-தௌலா.

1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்…!

இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.  

1757 ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால் இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்து செயலிழந்து விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார். 

சிராஜுத் தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர் ஆங்கிலேயர். பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்.

ஹைதர்  அலி & திப்பு சுல்தான்

மைசூர் சாம்ராஜ்ஜியத்தின்  சுல்தான் ஹைதர் அலி  ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ்க்கு கப்பம் கட்டிப்பணிய மறுத்து 1766 முதல் 1782 ல் இறக்கும்வரை பிரிட்டிஷ் படையுடன் வரலாற்றில் முதன்முறையாக ராக்கெட் தொழில் நுட்பத்துடன் போரிட்டார்..! 

சுல்தான் ஹைதர் அலி  

18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர்  ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

சுல்தான் ஹைதர் அலியின் இறப்புக்கு பின்னர், அவரின் மகன், மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து பல முறை போரிட்டு வென்று, ஆனால், இறுதியில் தன் 48-வது வயதில் 1799-ல் ஆங்கிலேயரால் மற்றொரு போர்முனையில் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தாரே..? ஏன் இதை எல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சேர்த்துக்கவில்லை..?

1799 ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவ‌ர்க‌ள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.

(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

Leave a comment