கீழடியில் அருங்காட்சியகம்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் க. பாண்டியராஜன், “கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறையினர் மேற்கொண்ட 3 கட்ட அகழாய்வுப் பணிகளில், முதல் 2 கட்ட அகழாய்வுப் பணிகளின் இடைக்கால ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளன. முழுமையான ஆய்வறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களில் கிடைக்கும்.

ஏற்கெனவே அறிவித்தபடி கீழடியில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதுதவிர, அதே பகுதியில் ரூ.15 கோடியில் நவீன அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தி விவரிக்கிறது.

Leave a comment